உலகம்

ஹிஜாப் அணியாமல் பாடிய ஈரானியப் பாடகிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றம்

top-news

டெஹ்ரான்: கட்டாய ஹிஜாப் விதிகளை மீறி ஆன்லைன் இசை நிகழ்ச்சி நடத்திய வழக்கில், ஈரானியப் பாடகி பரஸ்தூ அஹ்மதிக்கு 74 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில், ஈரானின் கோம் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் நேரடிப் பார்வையாளர்கள் இன்றிப் படமாக்கப்பட்ட இசை நிகழ்ச்சியைப் பாடகி பரஸ்தூ அஹ்மதி (29) யூடியூபில் வெளியிட்டார். அதில் அவர் தலையில் ஹிஜாப் அணியாமல், நீண்ட கருப்பு ஆடை அணிந்து ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பாடிய காணொளி உலகம் முழுவதும் பரவியது.

குற்றச்சாட்டு: பொது ஒழுக்கத்திற்கு எதிரான உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிட்டதாகவும், ஈரானின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாகவும் பாடகி பரஸ்தூ அஹ்மதி மற்றும் அவரது தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு: இந்த வழக்கில் பாடகி மற்றும் அவரது குழுவினருக்குத் தலா 74 கசையடிகள் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது; மேல்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கூடுதல் தடைகள்: கசையடி தண்டனையுடன், இவர்கள் ஐந்து பேரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவொரு கலை மற்றும் இசை நடவடிக்கைகளிலும் ஈடுபடவும், வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சர்வதேச விமர்சனங்கள்: கசையடி தண்டனையைக் கொடூரமானது மற்றும் மனிதத்தன்மையற்றது எனக் கண்டித்த பன்னாட்டு மன்னிப்பு சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், தண்டனையை நிறுத்துமாறு வலியுறுத்தின. எனினும், அந்த எதிர்ப்புகளையும் மீறித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.