உலகம்

என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கிற்கு மேலும் ஒரு பெண்ணுடன் தொடர்பா? அடுத்தடுத்து வெளியாகும் ரகசிய உறவு தகவல்களால் பரபரப்பு!

top-news

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகின் முக்கிய நிறுவனமாகத் திகழும் என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளால் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே ஒரு சீனப் பெண் தொழிலதிபருடனான திருமணத்தை மீறிய உறவை அவர் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது என்விடியா நிறுவனத்தில் பணியாற்றிய மற்றொரு பெண் உயர் அதிகாரியுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு பெண் நிர்வாகியுடன் தொடர்பு?

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, என்விடியாவின் சுகாதாரத் தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் கிம்பர்லி பவல் (Kimberly Powell) என்பவருடன் ஜென்சன் ஹுவாங் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நிறுவனத்தில் பணியாற்றிய ஐந்து முன்னாள் ஊழியர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக இருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு பெண்ணுடனான உறவை ஒப்புக்கொண்ட ஹுவாங்!

இதற்கு முன்பாக, ஆலிஸ் ஹுவாங் (Alice Huang) என்ற சீனப் பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங்கிற்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியாக அறியப்படும் ஆலிஸ் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவராக அமெரிக்க அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் என்விடியா நிறுவனத்தின் தொழில்நுட்ப ரகசியங்கள் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியது.

இதற்கிடையே, தனது மனைவிக்கு உண்மையாக இருக்கத் தவறிவிட்டதாகவும், தனது செயல்களுக்குத் தானே பொறுப்பேற்பதாகவும் ஜென்சன் ஹுவாங் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில் ஒப்புக்கொண்டிருந்தார்.

என்விடியா நிறுவனத்தில் விசாரணை!

அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் என்விடியா நிறுவனத்தின் நிர்வாகம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆலிஸ் ஹுவாங் தொடர்பான விவகாரத்தில் வெளிநாட்டு உளவுத்துறை தலையீடு இருந்ததா, நிறுவனத்தின் தொழில்நுட்பத் தகவல்கள் பாதிக்கப்பட்டனவா என்பது குறித்து என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கிம்பர்லி பவலுடனான உறவு குறித்த புதிய செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் புதிய குற்றச்சாட்டு தொடர்பாக ஜென்சன் ஹுவாங் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதாகவும், என்விடியா நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவின் தலைமைப் பொறுப்பு மற்றும் நிர்வாகத்தின் மீதான கவனம் மேலும் அதிகரித்துள்ளது.