உலகம்

டிரம்ப் அரசு கொண்டு வந்த விசா விதிகளை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்!

top-news


வாஷிங்டன்: அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் விசா காலத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த புதிய விதிகளை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

பின்னணி என்ன?: அமெரிக்காவில் வெளிநாட்டினர் நீண்ட காலம் தங்குவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) சார்பில் புதிய விசா விதிகள் உருவாக்கப்பட்டன. முன்னதாக, வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பு முடியும் வரை (Duration of Status) அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் புதிய விதிகளின்படி, சர்வதேச மாணவர்களின் விசா காலம் அதிகபட்சமாக 4 ஆண்டுகளாகவும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் தங்கும் காலம் வெறும் 240 நாட்களாகவும் குறைக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு: அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் மாசசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதியின் அதிரடித் தீர்ப்பு: இந்த வழக்கை விசாரித்த பெடரல் நீதிபதி டென்னிஸ் சேலர் (F. Dennis Saylor), டிரம்ப் அரசின் புதிய விசா கொள்கையை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிடுகையில், "பி.எச்.டி. (Ph.D.) போன்ற நீண்ட கால ஆராய்ச்சிப் படிப்புகளைத் தடுக்கும் வகையிலும், மாணவர்களின் கல்வி வாய்ப்புகளைச் சீர்குலைக்கும் வகையிலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயல்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) வழங்கிய அதிகார வரம்பை மீறி, தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன" எனக் கடுமையாகச் சாடினார்.

இந்திய மாணவர்களுக்குப் பெரும் நிம்மதி: அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி பயின்று வரும் நிலையில், அதில் இந்திய மாணவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.