உலகம்

“ஃப்ளை துபாய்” துணை விமானி விவகாரத்தில் ஈரான் தொடர்பு உறுதியானால் கடும் நடவடிக்கை: ட்ரம்ப் எச்சரிக்கை

top-news

வாஷிங்டன்: இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘ஃப்ளை துபாய்’ விமானத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில், துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

‘ஃப்ளை துபாய்’ விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்றபோது, துணை விமானி கேப்டனைத் தாக்கியதாகவும், விமானம் திடீரென உயரத்தை இழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானம் சவுதி அரேபியாவின் தபூக் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு இருந்ததா என்பதும் விசாரணையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், துணை விமானியின் செயல்பாட்டுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் (IRGC) தொடர்பு இருக்கலாம் எனக் கேட்கப்பட்டபோது, அது சாத்தியம் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், “மிகக் கடுமையாக தாக்கப்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் நேரடி தொடர்பு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இஸ்ரேல் தரப்பிலும் இந்த நிலையில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.