அபுதாபி: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரக அரசு உத்தரவிட்டுள்ளது.
FZ1073 என்ற அந்த விமானம் செப்டம்பர் 30ஆம் தேதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, விமானி அறையில் இரு விமானப் பணியாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக ஃப்ளைதுபாய் தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் டாக்டர் ஹமத் சைப் அல் ஷம்சி, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். குழு, விமானத்தின் சம்பவத்துக்கான காரணங்கள், பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரிக்க உள்ளது. மேலும், சம்பவத்திற்கு முன்கூட்டிய திட்டமிடல் இருந்ததா அல்லது பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்பு உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் கொடியின் கீழ் இயக்கப்படுவதால், விமானத்தில் நாட்டிற்கு வெளியே நடந்த குற்றச் செயல்களுக்கும் அமீரக சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அதிகாரம் உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசாரணை முடியும் வரை உறுதி செய்யப்படாத தகவல்களையும் ஊகங்களையும் பரப்ப வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



