சான் பிரான்சிஸ்கோ: உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உரையாடல் தளம் *சாட் ஜிபிடி* திடீரென 20 நிமிடங்களுக்கு மேல் செயலிழந்தது. இதனால், பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
முடக்கம் ஏற்பட்ட நேரத்தில், பயனாளர்கள் சாட் ஜிபிடி தளத்தை திறக்க முடியாமல் போனதுடன், ஏற்கனவே நடைபெற்று வந்த உரையாடல்களும் தடைபட்டன. உடனடி தொழில்நுட்ப ஆதரவிற்காக நம்பிக்கையுடன் இருந்தவர்கள் குழப்பத்துக்குள்ளானனர். குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்கள் பணிகளில் இடையூறு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளிவந்துள்ளன.
இந்த திடீர் தொழில்நுட்ப கோளாறு குறித்து, சாட் ஜிபிடியை உருவாக்கிய அமெரிக்க நிறுவனம் *ஓபன் ஏ.ஐ.* இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை. வழக்கமாக, உலகளாவிய அளவில் ஏற்படும் தொழில்நுட்ப முடக்கங்கள் குறித்து நிறுவனம் விரைவில் விளக்கம் அளிப்பது வழக்கம். ஆனால், இம்முறை நீண்ட நேரமாகியும் எவ்வித தகவலும் வெளியாகாதது பயனாளர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் #ChatGPTDown என்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. பலரும் “இணைய தேடலுக்குப் பதிலாக சாட் ஜிபிடியை நம்பியதால், இப்போது எங்கள் பணிகள் சிக்கலில் சிக்கியுள்ளன” எனக் கூறி தங்களது வேதனையைப் பகிர்ந்துள்ளனர்.
தற்போது சேவை மெதுவாக மீண்டு வருகின்றதாகத் தெரியவரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற திடீர் முடக்கங்களை தவிர்க்கும் வகையில் நிறுவனத்திடம் பயனாளர்கள் விளக்கமும் உறுதியும் கோரியுள்ளனர்.


