புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார்.
கடந்த சில நாட்களாக ஜி ஜின்பிங் இந்தியா வருவாரா என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் அவரது பயணத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் மாநாட்டில் அவரது பங்கேற்பு குறித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முதல் பயணமாக அமைகிறது. இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியுடன் அவர் அதிகாரப்பூர்வமற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்தார். 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவில் ஏற்பட்ட பதற்றத்தின் பின்னணியில், தற்போதைய பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டின் போது பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா என்பதும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை முக்கிய பேச்சுவார்த்தை அம்சங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங்கின் நேரடி பங்கேற்பு, இந்தியா-சீனா உறவிலும், விரிவடைந்துள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் எதிர்கால செயல்பாடுகளிலும் முக்கிய கவனம் பெற்றுள்ளது.



