தெஹ்ரான்: ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் உருவாகி, மீண்டும் கடும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.
தாக்குதலுக்கான பின்னணி: ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் ராணுவம் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்றதாகவும், அதைத் தடுக்கும் நோக்கில் ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள 'லாரக்' தீவில் அமைந்திருந்த ஈரானிய ஏவுகணை ஏவுதளங்கள் மீது முதலில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீதும் ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைப் பாய்ந்தது. எனினும், அந்த இலக்குகள் இரு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கா தீவிரத் தாக்குதல்
இதன் தொடர்ச்சியாக, ஈரான் மீது அமெரிக்கா நேற்றிரவு மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. ஈரானின் குஜெஸ்தான் மற்றும் ஹர்முஸ்கன் ஆகிய மாகாணங்களில் அமைந்துள்ள முக்கிய நகரங்களான பண்டர் அப்பாஸ், குவாசம் தீவு, சாம்பஹார், அஹ்வாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகளை வீசின. ஈரானின் ஏவுகணைத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ மையங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் சோகம் - 19 பேர் பலி : அமெரிக்கா நடத்திய இந்தத் தொடர் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடியிருப்புப் பகுதியையொட்டி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஏவுகணை விழுந்து நொறுங்கியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இருப்பினும், பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளைத் தாங்கள் குறிவைக்கவில்லை என்று அமெரிக்க ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிக அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே நேரடியாக வெடித்துள்ள இந்த மோதல், உலக அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



