உலகம்

அதிரும் அமெரிக்காவின் கடன்: ரூ.3,840 லட்சம் கோடியை எட்டியது!

top-news

வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பொதுக்கடன் வரலாறு காணாத வகையில் அதிகரித்து, இந்திய மதிப்பில் ரூ.3,840 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இது 40 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறையின் சமீபத்திய நிதி அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க கருவூலத்துறை வர்த்தகம் முடிவடைந்ததும் தினசரி நிதி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. கடந்த 18-ந்தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டின் மொத்த கடன் புதிய உச்சத்தை தொட்டிருப்பது தெரியவந்துள்ளது.

8 மாதங்களிலேயே அதிகரிப்பு

2026-ம் நிதியாண்டின் முடிவில் அமெரிக்காவின் கடன் ரூ.3,773 லட்சம் கோடியாக இருக்கும் என அமெரிக்க காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் முன்கணித்திருந்தது.

ஆனால், நிதியாண்டு தொடங்கிய 8 மாதங்களிலேயே அந்த அளவை கடந்து, கடன் ரூ.3,840 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கடன் அதிகரிக்க காரணம் என்ன?

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், அதிகரித்து வரும் ராணுவச் செலவுகள், கூட்டுப் பாதுகாப்புக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்டவை அமெரிக்காவின் செலவினத்தை அதிகரித்துள்ளன.

மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால், அரசின் கடனுக்கான வட்டி செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவின் கடன் சுமை வேகமாக அதிகரிக்க முக்கிய காரணங்களாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையே, தேர்தல் காலத்தில் அரசு செலவினங்களை குறைப்பதாக உறுதியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம், நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.