இந்தியா முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற 7-வது தேசிய அபாகஸ் அடிப்படையிலான எண்கணித மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் அபாகஸ் நிறுவனம், ஆண்டுதோறும் தேசிய அளவில் மனக்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கணிதத் திறனை வெளிப்படுத்தினர்.
போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு மற்றும் பயிற்சி பணிகளில் ஈடுபட்டனர். மாணவர்கள் துல்லியமாகவும் விரைவாகவும் மனக்கணிதத் திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தியன் அபாகஸ் நிறுவனம் கடந்த ஓராண்டாக சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச அபாகஸ் மற்றும் மனக்கணிதப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் பலனாக அரசு பள்ளி மாணவர்களும் இந்த தேசியப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சிகள் மாணவர்களின் நினைவாற்றல், கணிதத் திறன், கவனச்சேர்ப்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இந்தியன் அபாகஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பஷீர் அகம்மது பேசுகையில், இந்திய மாணவர்களை உலகளவில் எண்கணித திறனில் முன்னோடிகளாக உருவாக்குவதே நிறுவனத்தின் இலக்கு என தெரிவித்தார். மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்பு எண்கணித பயிற்சித் திட்டமும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் கூறினார்.



