தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி உள்ளிட்ட முக்கிய நிர்வாக மற்றும் நிதி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், மாநில நிதிநிலை, மக்கள் நலத் திட்டங்கள், புதிய வளர்ச்சித் திட்டங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தவெக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட்டின் தேதி மற்றும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கான அட்டவணை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



