தமிழ்நாடு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகம்!

top-news

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ லஞ்சம் கேட்டால், அது குறித்து பொதுமக்கள் உடனடியாகப் புகார் அளிக்க புதிய வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஏதேனும் சேவைக்காக லஞ்சம் கேட்கப்பட்டால், பொதுமக்கள் அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) புகார் அளிக்க 94981 80936 என்ற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் இணையதளங்களிலும் பொதுமக்கள் எளிதில் காணும் வகையில் தெளிவாக இடம்பெறச் செய்ய வேண்டும்.

மேலும், அந்த வாட்ஸ்அப் எண்ணுடன் சேர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கான இணைப்பும் (Link) அனைத்து அரசுத் துறை இணையதளங்களிலும் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த புதிய நடவடிக்கை மூலம் ஊழல் மற்றும் லஞ்சப் புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.