தமிழ்நாடு

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை.. ஜூலை 17 முதல் புதிய ஆன்லைன் நடைமுறை.. முழு விவரம்!

top-news

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களை பதிவு செய்யும் "வருகை இல்லா ஆவணப்பதிவு" (No Visit Document Registration) முறை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை ஜூலை 17 முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டத்தின் மூலம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில மேம்பாட்டாளர்கள் தங்களது முதல் விற்பனை மனை, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட ஆவணங்களை பதிவுத்துறையின் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். வாங்குபவர், விற்குபவர் மற்றும் சாட்சியாளர்கள் ஆதார் அடிப்படையிலான கைரேகை அல்லது கருவிழி சரிபார்ப்பை முடித்து, பதிவு கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்த முடியும்.

பதிவு ஆவணங்களை ஆய்வு செய்யும் சார்பதிவாளர் கூடுதல் தகவல் கோரினால், அதை 30 நாட்களுக்குள் இணையவழியில் சமர்ப்பிக்கலாம். பதிவு நிறைவடைந்ததும், மின்னணு கையொப்பத்துடன் கூடிய பதிவு ஆவணம் மற்றும் ரசீது இணையவழியாக அனுப்பப்படும். மேலும், 60 நாட்கள் வரை அந்த ஆவணத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, தேவையற்ற அலுவலக வருகையை குறைப்பது, பதிவு செயல்முறையை வேகப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதாகும்.