சென்னை

கூவம் ஆற்றுக்கு மீண்டும் புத்துயிர்: 3 கி.மீ. பகுதியில் நடைபாதை, சைக்கிள் பாதை! முதல்வர் விஜய் ஆய்வு

top-news

சென்னை: சென்னை நகரின் முக்கிய நீர்வழித்தடங்களில் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பு பணிகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுப்பதுடன், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை மேற்கொள்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

தமிழக அரசின் 2026-27 நிதிநிலை அறிக்கையில் சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூவம் ஆறு மறுசீரமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 கி.மீ. நீளப் பகுதியில் நடைபாதைகள், மிதிவண்டிப் பாதைகள், நதிக்கரை நடைபாதைகள், பார்வையிடும் தளங்கள் மற்றும் பசுமைப் பகுதிகளை உருவாக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சமூகப் பயன்பாட்டு வசதிகள் மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை நகரின் நதிச்சூழலை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த பொதுவெளி மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்கும் நோக்கில், கூவம் ஆறு மறுசீரமைப்பை பல்வேறு கட்டங்களாகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையுடனும் செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், திட்டத்தை செயல்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை கோருவது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.