சென்னை

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம்: மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம் என ஸ்டாலின் எச்சரிக்கை

top-news

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், திட்டம் தொடரப்பட்டால் மீனவர்களுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்க நிர்வாகிகள், ஸ்டாலினை சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியிட்ட அறிக்கையில், மீனவர்களின் வாழ்விடமும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் வகையில் இந்தத் திட்டம் அமைக்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டினப்பாக்கம் பகுதியில் ஏராளமான மீனவக் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் உள்ளதாகவும், தலைமைச் செயலகம் போன்ற மிகப்பெரிய அரசு வளாகம் அமைக்கப்பட்டால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்பாடு தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கெனவே ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் இருப்பதால், மாற்று இடங்களை அரசு பரிசீலிக்கலாம் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவர்களுக்கு குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டம் அமல்படுத்தப்பட்டால் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து உள்ளிட்டவை பாதிக்கப்படலாம் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணிகளை அரசு தொடர்ந்து முன்னெடுத்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.