சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி சென்னை மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 16,500 காவல்துறையினர் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிலைகளை காவல்துறை அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலை கரைப்பு நடைபெறும் இடங்களில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளன.
ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



