உலகம்

சீன ஆதரவுடன் நிலவுக்கு பயணம் செய்யும் பாகிஸ்தான் !

top-news

சென்னை: பொருளாதார நெருக்கடி, கடன் சுமை, அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை ஆகிய சூழ்நிலைகளில் இருந்தபோதும், 2035-ம் ஆண்டிற்குள் நிலவில் விண்கலனை தரையிறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை பாகிஸ்தான் தனிச்சார்பாக எந்தவொரு விண்வெளித் திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றவில்லை. பாகிஸ்தான் விண்வெளி முகமை ‘SUPARCO’ நிறுவப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேலாகினும், போதுமான நிதி மற்றும் தொழில்நுட்ப திறன் இல்லாமை காரணமாக அதன் திட்டங்கள் தொடர்ந்து தாமதமடைந்து வந்தன.

இதுவரை மேற்கொண்ட அனைத்து விண்வெளி நடவடிக்கைகளும் சீனாவின் ஆதரவை மட்டுமே சார்ந்தவையாக இருந்தன. கடந்த மாதம் பாகிஸ்தான் காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ஆனால் அந்த செயற்கைக்கோள் பாகிஸ்தான் கொடியுடன் விண்ணில் ஏவப்பட்டிருந்தாலும், அதனுடன் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப பணிகளும் சீனாவின் மேற்பார்வையில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சீனாவுக்குச் சென்றிருந்த பாகிஸ்தான் கூட்டாட்சி அமைச்சர் ஹசன் இக்பால், தமது நாட்டின் எதிர்கால விண்வெளி திட்டங்களைப் பற்றி பேசியபோது, சீனாவின் உதவி தவிர்க்க முடியாத ஒன்று என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 2035-ம் ஆண்டுக்குள் நிலவில் விண்கலனை தரையிறக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த விண்வெளி வீரரை விண்ணில் அனுப்பும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, சீனாவின் Chang’e 8 திட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்கவுள்ளது. இந்த திட்டம் சர்வதேச அளவிலான சந்திராய்வு ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான முதன்மை நடவடிக்கைகளில் ஒன்றாகும். பாகிஸ்தானின் அனைத்து விண்வெளி முயற்சிகளிலும் சீனாவின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் விண்வெளி முகமை SUPARCO 1961-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் அதன் வளர்ச்சி பல ஆண்டுகளாக தாமதமடைந்தது. இதற்கிடையில், இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, உலகளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் ஏவுவதன் மூலம் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது, உலகளவில் பாராட்டுக்குரிய சாதனையாகும்.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் இன்னும் ஆரம்ப நிலை மட்டுமே எட்டியுள்ள நிலையில், சீனாவின் ஆதரவு இன்றி நிலவுக்கான தனது திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்பது வெளிப்படையாகிறது. இருப்பினும், அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை மீறி நிலவுக்கான தனது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றப் போவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.