வாஷிங்டன்:
பாகிஸ்தானுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவது தொடர்பாகப் பரவிய ஊகச் செய்திகளுக்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ திறனை மேம்படுத்தும் வகையில் புதிய ஏவுகணைகள் எதுவும் விற்கப்படவில்லை என்றும், இந்த ஒப்பந்தம் ஏற்கெனவே உள்ள ஆயுதங்களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்களை வழங்குவதற்காக மட்டுமே என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
பரவிய செய்தி என்ன?
அமெரிக்காவின் போர்த் துறை (Department of War), கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, பல்வேறு நாடுகளுக்கான ராணுவத் தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு AIM-120 (AMRAAM) உள்ளிட்ட அதிநவீன வான்-வழி ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது பாகிஸ்தானின் வான்வழிப் போர் திறனை அதிகரிக்கும் என்ற ஊகத்தையும் கிளப்பியது.
அமெரிக்காவின் விளக்கம்:
இந்தச் செய்திகளை அமெரிக்கத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், "ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களுக்கு மாறாக, இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்குப் புதிய AIM-120 (AMRAAM) ஏவுகணைகள் வழங்குவதற்கான எந்த ஒரு பகுதியும் இல்லை. இந்த ஒப்பந்தம் பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு திருத்தமாகும். இது ஏற்கனவே உள்ள இராணுவ விற்பனை ஒப்பந்தங்களின் பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பராமரிப்பு ஒப்பந்தம் பாகிஸ்தானின் தற்போதைய இராணுவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல என்றும், அது வெறும் தளவாடப் பராமரிப்புக்கு மட்டுமே என்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.


