ஸ்டாக்ஹோம்: உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான நோபல் பரிசு, 2025ஆம் ஆண்டுக்கான இலக்கியத் துறைக்காக ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை (László Krasznahorkai) என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத் துறையில், "அழிவுகரமான பயங்கரங்களுக்கு மத்தியில் கலையின் வலிமையை மீண்டும் நிலைநிறுத்தும், அவரது கட்டாயப்படுத்தும் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒட்டுமொத்தப் படைப்பிற்காக" அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாகச் சுவீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
நோபல் பரிசின் பின்னணி:
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கிணங்க, அவரது நினைவாக இந்த மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய மற்றும் மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, மருத்துவத் துறை, இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


