காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முன்வைத்த சமாதானத் திட்டத்திற்கு முழு ஆதரவு அளித்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்தியத் தலைவர்களுடனான ஆலோசனைகள் குறித்துப் பேசினார்.
டிரம்ப் பேச்சு:
"காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எங்களுடைய சமாதானக் கொள்கைகளுக்கு ஷேபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் நூறு சதவீதம் ஆதரவு அளித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தலைவர்கள் ஆரம்பம் முதலே எங்களுடன் இருந்தனர். அவர்கள் நம்பமுடியாத அளவுக்கு பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக பாகிஸ்தான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்று டிரம்ப் பாராட்டினார்.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த நிலையில், இந்த சமாதானத் திட்டத்திற்கான பாராட்டுகளை டிரம்ப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, காசாவின் மறுசீரமைப்புக்கு வழிவகை செய்யும் 20 அம்சத் திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


