**தியான்ஜின் (சீனா):** ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் **ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ)** உச்சிமாநாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அப்பாவி சுற்றுலா பயணிகளை பலிகொண்ட இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா *ஆபரேஷன் சிந்தூர்* என்ற ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக மேற்கொண்டது.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் எஸ்சிஓ இருநாள் உச்சிமாநாட்டின் பிரகடனத்தில்,
> “பஹல்காமில் நடந்த தாக்குதல் கடுமையாக கண்டிக்கப்படுகிறது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம். தாக்குதலை நிகழ்த்தியோர், திட்டமிட்டோர், ஆதரித்தோர்—அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எல்லை தாண்டிய ஊடுருவல்களை நிறுத்த வேண்டுமென தியான்ஜின் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டதுடன், பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 10 நாடுகள் கொண்ட எஸ்சிஓவில் பாகிஸ்தானும் உறுப்பினராக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் உரையாற்றும்போது,
> “பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினையில் எந்தவிதமான இரட்டை நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சில நாடுகள் வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகின்றன” என்று பெயர் குறிப்பிடாமல் பாகிஸ்தானை குற்றம் சாட்டினார்.


