உலகம்

இந்தியா – ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்: அமெரிக்கா கொந்தளிப்பு

top-news

**வாஷிங்டன்:** ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகர் பீட்டர் நவரோ. இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கும், உக்ரைன் போரின் நீடிப்புக்கும் காரணமாக உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா – இந்தியா உறவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் பீட்டர் நவரோ சமீபத்தில் வெளியிட்ட சமூக ஊடக பதிவுகள் கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கான பாதை, “ஓரளவு புதுடெல்லி வழியாகவே செல்கிறது” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய தொடர் பதிவுகளில், இந்தியாவை நேரடியாக குறிவைத்து அவர்,
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக நடத்தப்பட விரும்பினால், அதற்கேற்ப செயல்பட வேண்டும். தற்போது இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தக மற்றும் எரிசக்தி கொள்கைகள் அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் கூடுதல் வரி குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். “இந்தியாவின் அதிக வரி விதிப்புக்கு பதிலளிக்கும் நோக்கில் 25% வரி விதிக்கப்படுகிறது. அதோடு, தேசிய பாதுகாப்புக்காக கூடுதலாக 25% வரியும் விதிக்கப்படும்” என கூறியுள்ளார்.

நவரோவின் குற்றச்சாட்டு:

* இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரித்து, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன.
* உக்ரைன் போருக்கு முன்னர் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது. இன்று அது 30% க்கும் மேல் உயர்ந்துள்ளது.
* தற்போது இந்தியா நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. ஆனால் இதில் பாதிக்கும் மேற்பட்ட அளவு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், இந்திய நிறுவனங்களும் ரஷ்யாவும் லாபம் பெறுகின்றன.

மேலும், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு 50 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா அமெரிக்க டாலரைப் பயன்படுத்துகிறது. அதோடு, ரஷ்யாவின் ஆயுதங்களையும் தொடர்ந்து வாங்குகிறது. இத்தகைய செயல்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கும், பாதுகாப்பிற்கும் நேரடி பாதிப்பை உண்டாக்குகின்றன” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை குழு நவரோவின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளது. அக்குழு வெளியிட்ட அறிக்கையில்,
“உக்ரைன் பிரச்சினையை முன்னிட்டு இந்தியாவை குறிவைத்து அதிக வரி விதிப்பது தவறான முடிவு. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா போன்ற நாடுகள் மீது நடவடிக்கை எடுக்காமல், இந்தியாவை மட்டுமே குறிவைப்பது இரு நாட்டு உறவை பாதிக்கும். இது உண்மையில் உக்ரைனைப் பற்றியது அல்ல; வணிக – அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் முடிவாகும்” என்று தெரிவித்துள்ளது.

இதனால், ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்கும் சூழலில், அமெரிக்கா – இந்தியா வர்த்தக மற்றும் தூதரக உறவுகள் புதிய பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.