**வாஷிங்டன்:**வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 25) முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு வந்த தென் கொரிய அதிபர் **லீ ஜே மியுங்**-வை ட்ரம்ப் உளரசாக வரவேற்றார். அங்கு நடைபெற்ற இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு, ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழலைச் சுற்றிய பல்வேறு முக்கிய விவாதங்களுக்கு மேடையாக அமைந்தது.
அப்போது பேசிய ட்ரம்ப்,
“ராஜதந்திரத்தை முன்னிறுத்தும் முற்போக்கான கொள்கையுடைய லீ ஜே மியுங் போலவே, வட கொரியாவுடன் உறவு பேணுவதிலும் எனது நிலைப்பாடு அதே வகையில் உள்ளது. எனது முதல் பதவிக் காலத்தில் மூன்று முறை கிம் ஜாங் உன்னை சந்தித்தேன். அவ்வப்போது எங்கள் உரையாடல்கள் அன்பாகவே அமைந்தன. அந்தச் சந்திப்புகள் பதற்றங்களைத் தணித்தாலும், நீடித்த ஒப்பந்தத்தை உருவாக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
ஆனால் நான் மீண்டும் ஒருநாள் கிம்மை சந்திப்பேன் என்பதில் நம்பிக்கை உடையவன். அவரை பார்க்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கிம் என்னிடம் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் நட்போடு நடந்துகொண்டார். எனவே, இந்த ஆண்டு அவருடன் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய தென் கொரிய அதிபர் லீ,
“ட்ரம்ப், அமெரிக்காவை வெறும் அமைதியை காக்கும் நாடாக அல்ல, உலகில் அமைதியை உருவாக்கும் சக்தியாக மாற்றியுள்ளார். கிம் ஜாங் உன்னுடனான உங்கள் வரவிருக்கும் சந்திப்பையும், வட கொரியாவில் ட்ரம்ப் டவர் எழுப்பப்பட்டு, அதில் நீங்கள் கோல்ஃப் விளையாடும் நாளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கிம் கூட உங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறார்.
ஆனால் மறுக்க முடியாத உண்மை என்னவெனில், வட கொரியா விரைவில் ஆண்டுக்கு 10 முதல் 20 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் பெறுகிறது. தடைகள் மற்றும் அழுத்தங்கள் இருந்தபோதும், அமெரிக்காவை நேரடியாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் உருவாக்க முடிந்துள்ளது. கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் வட கொரியாவின் அணு ஆயுத கையிருப்பு கணிசமாக அதிகரித்திருப்பது உலகுக்கு பெரும் சவாலாக உள்ளது,” என்றார்.
இந்தச் சந்திப்பின் மூலம் அமெரிக்கா–தென் கொரியா உறவுகள் மேலும் வலுப்பெறும் என இருநாட்டு தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், ட்ரம்ப்–கிம் சந்திப்பு மீண்டும் சாத்தியமாகுமா, அத்துடன் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் குறையுமா என்ற கேள்விக்கு உலக நாடுகள் ஆவலுடன் காத்திருக்கின்றன.


