**கொழும்பு:** இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நிதி முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு நகரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பதவிக் காலத்தில், சொந்த செலவுக்காக அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரணில் விக்ரமசிங்கே இங்கிலாந்திற்கு மேற்கொண்ட தனிப்பட்ட பயணத்தின்போது, தனது செலவுகளுக்காக $2,00,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.69 கோடி ரூபாய்) அரசுப் பணத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்புலனாய்வுத் துறை விரிவான விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில், அவர் மீது வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கைது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரணில் விக்ரமசிங்கே பல ஆண்டுகளாக நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பல்வேறு காலகட்டங்களில் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றியவர். நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் இத்தகைய உயர்மட்ட தலைவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பதால், இச்சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.
கைது செய்யப்பட்ட விக்ரமசிங்கே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடரும் என்றும் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் இலங்கை அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


