டெஹ்ரான்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகர் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள பந்தர் கமீர் (Bandar Khamir) என்ற துறைமுக நகரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள 'பந்தர் போல்' (Bandar Pol) என்ற படகுத் துறையின் மீது ஏவுகணைகள் பாய்ந்ததில், அங்கிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் இரண்டு கப்பல்கள் மற்றும் ஒரு வாகனம் பலத்த சேதமடைந்ததாக ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான 'இர்னா' (IRNA) தெரிவித்துள்ளது.
துறைமுக நகர் மட்டுமின்றி, ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலும் இன்று அதிகாலை தொடர்ச்சியாகப் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான இடங்களிலிருந்து கரும்புகை வெளியேறுவதைக் காண முடிந்ததாகச் சர்வதேசச் செய்தி முகமைகள் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம், குறிப்பாக ஹார்மோஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இந்த போரை நிறுத்தத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


