உலகம்

அமெரிக்க வான்பரப்பில் சீறிப்பாய்ந்த விண்கல்: 45 ஆயிரம் மைல் வேகத்தில் சென்றதால் மக்கள் அச்சம்!

top-news

நியூயார்க்: அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நேற்று காலை ஒரு பிரம்மாண்ட விண்கல் (Meteor) வான்பரப்பை கிழித்துக்கொண்டு சென்றது. காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்த அரிதான நிகழ்வு, ஒரு மாபெரும் எரிபந்து பகல் நேரத்திலேயே வானில் தோன்றுவது போல காட்சியளித்தது. 

வெடிகுண்டு போன்ற சத்தம்: இந்த விண்கல் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது, சுமார் 250 டன் எடை கொண்ட டி.என்.டி. (TNT) வெடிகுண்டு வெடித்தால் எந்த அளவு சத்தம் ஏற்படுமோ, அந்த அளவிற்கு ஒரு பயங்கரமான அதிர்வெொலி கேட்டது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த வீடுகள் குலுங்கின, சில இடங்களில் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து விழுந்தன. 

தற்போது நிலவி வரும் போர் சூழலால், மக்கள் இதனை ஏவுகணைத் தாக்குதல் அல்லது விமான விபத்து என்று நினைத்து பெரும் அச்சமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அவசர கால உதவி எண்களைத் தொடர்பு கொண்டனர். 

நாசா விளக்கம்: இந்த நிகழ்வு குறித்து ஆய்வு செய்த நாசா (NASA) மற்றும் விஞ்ஞானிகள் குழு, இது விண்வெளியில் இருந்து வந்த ஒரு எரிகல் என்பதை உறுதிப்படுத்தினர். 

வேகம்: மணிக்கு சுமார் 45,000 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் பாய்ந்தது.

அளவு: இதன் எடை சுமார் 7 டன் என்றும், பரப்பளவு 2 மீட்டர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பயணம்: முதலில் ஈரி ஏரிக்கு (Lake Erie) மேலே 30 மைல் உயரத்தில் கண்டறியப்பட்ட இது, பின்னர் காற்றில் 34 மைல்கள் பயணித்து ஓஹியோவின் வேலி சிட்டி (Valley City) பகுதியில் உடைந்து விழுந்தது. 

இந்த விண்கல்லின் சிதறிய பாகங்கள் நிலத்தில் விழுந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர், இருப்பினும் அவை இன்னும் கண்டறியப்படவில்லை.