பியாங்யாங்: வடகொரியாவில் கடந்த மார்ச் 15-ம் தேதி 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான (Supreme People's Assembly) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக அரசு ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: வாக்குப் பதிவு: பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்தவர்கள் மற்றும் கடலில் பணிபுரிந்த மிகச் சிலரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை.
ஆதரவு நிலவரம்: போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு 99.93% பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
எதிர்ப்பு வாக்குகள்: மிக அரிதாக, 1957-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக 0.07% பேர் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்துள்ளதை அரசு ஊடகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
முக்கிய வெற்றியாளர்கள்: இந்தத் தேர்தலில் 687 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிபரின் சகோதரி கிம் யோ ஜோங், கல்லிம்கில் தொகுதி எண் 5-ல் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலில் பதிவான அந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. "அந்த 0.07% பேரின் பெயர்களைக் கூறுங்கள்" என்றும், "அவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" என்றும் நெட்டிசன்கள் நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலை வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஒரு "காட்சித் தேர்தல்" (Show Election) என்று விமர்சித்துள்ளனர்.


