உலகம்

"பிரதமா் மோடி கிளம்பிய பிறகே ஈரான் மீது தாக்குதல்": இஸ்ரேல் விளக்கம்!

top-news

ஜெருசலேம்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் நிறைவடைந்த பின்னரே ஈரான் மீது தாக்குதல் நடத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றிருந்தார். அவர் அங்கிருந்து இந்தியா திரும்பிய சில மணி நேரங்களிலேயே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் நடத்தின. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு முன்கூட்டியே தெரியுமா? அல்லது இஸ்ரேல் அரசு இதுகுறித்து அவரிடம் முன்கூட்டியே ஆலோசித்ததா? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. குறிப்பாக, இந்தியாவின் நடுநிலைக் கொள்கைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் (Gideon Sa'ar) கூறியதாவது:

"பிரதமர் மோடியின் வருகைக்கும் ஈரான் மீதான தாக்குதலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. தாக்குதல் நடத்துவதற்கான 'சரியான வாய்ப்பு' (Operational Opportunity) பிரதமர் மோடி இஸ்ரேலை விட்டுப் புறப்பட்ட பிறகே அமைந்தது. அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது."

தாக்குதலுக்கு முன்பாகவே இதுகுறித்து மோடியிடம் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, "அப்போது இத்தகைய முடிவு எடுக்கப்படாததால், அது குறித்துப் பேச வாய்ப்பில்லை" என்றும் இஸ்ரேலியத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது இந்தியா - இஸ்ரேல் இடையிலான உறவு 'சிறப்பு வியூகக் கூட்டாண்மை' (Special Strategic Partnership) என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈரான் மீதான தாக்குதல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சில சவால்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.