உலகம்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை? - ஈரான் பாதுகாப்புத் தலைவர் முக்கிய அறிவிப்பு

top-news

தெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஈரானின் பாதுகாப்புத் தலைவர் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தின. இந்த அசாதாரண சூழலால், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முடங்கின.

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இருக்கும் அலி லாரிஜானி, ஓமன் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய நிபந்தனை: ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் சில சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்குப் பதிலாக அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மறுப்பு அறிக்கை: அதே சமயம், மற்றொரு அறிக்கையில் அலி லாரிஜானி, "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது" என்றும், தங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்க நடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்றும் எச்சரித்துள்ளார்.

ஈரானின் இந்த கோரிக்கை குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரானின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகவே உள்ளது. அவர்கள் முன்னரே இதற்கு இணங்கியிருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானில் உச்ச தலைவரின் மறைவுக்குப் பின் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.