உலகம்

இந்திய விமானங்களுக்கு தடை: பாகிஸ்தானுக்கு ரூ.1,240 கோடி இழப்பு

top-news

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் இடையே வான்வெளி பயன்பாட்டில் கடும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையும் சர்வதேசத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா *ஆபரேஷன் சிந்தூர்* என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் தளங்களை அழித்தது. பின்னர் இருதரப்பும் மோதல்களில் ஈடுபட்டாலும், இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இதற்கிடையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்ததாவது:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்திய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை செய்தது. இந்திய அரசும் இதே போன்று பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி தடை விதித்தது.

இந்திய விமானங்கள் மீது விதிக்கப்பட்ட இந்த தடை, ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை அமலில் இருந்தது. இதனால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.1,240 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாணய மதிப்பில் இது 4.1 பில்லியன் ரூபாய் ஆகும். பாகிஸ்தான் வான்வழி போக்குவரத்து சுமார் 20 சதவீதம் குறைந்ததாகவும், தினசரி 100 முதல் 150 இந்திய விமானங்கள் பயன்படுத்திய வழிகள் இப்போது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தடை காரணமாக பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்த்து நீளமான மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இது நேர விரயம் மற்றும் செலவின உயர்வுக்கு வழிவகுக்கிறது.

வரும் ஆகஸ்ட் 24 காலை 4.59 மணி வரை, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த வான்வெளி தடை, ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு கூடுதல் சுமையாக மாறி உள்ளது.