உலகம்

முடிவுக்கு வருமா உக்ரைன் போர் ? புதினை சந்திக்கிறார் டிரம்ப் !

top-news

**நியூயார்க்:** ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கு விடை காணும் நோக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அலாஸ்காவில் வரும் 15-ஆம் தேதி சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு, உலக அரசியல் தரப்பில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

2022 பிப்ரவரி 24-ஆம் தேதி, நேட்டோவுடன் உக்ரைன் இணைந்து செயல்பட்டதை எதிர்த்து, எச்சரிக்கை விடுத்தும், அதன் விளைவாக ரஷ்யா உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதன் பிறகு, கிழக்கு ஐரோப்பாவில் இரத்தமும் புகையும் கலந்த கடுமையான போர் நிலவி வருகிறது. பல உலகத் தலைவர்கள், சர்வதேச அமைப்புகள், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த முயன்றும், எதுவும் பயனளிக்காத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தராக களமிறங்க முடிவு செய்துள்ளார். *வால் ஸ்ட்ரீட் ஜர்னல்* வெளியிட்ட தகவலின்படி, அலாஸ்காவில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், போரை நிறுத்துவதற்கான முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன.

அமைதிக்கான தனது நிபந்தனைகளை புதின் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். “கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து உக்ரைன் மற்றும் நேட்டோ படைகள் பின்வாங்க வேண்டும். அதற்கு பின், போர் நிறுத்தத்திற்கு நான் தயாராக உள்ளேன்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பகுதியை ரஷ்யாவின் பகுதியாக சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையாகும்.

ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கையில், புதின் வேண்டுகோள், உக்ரைனின் பிராந்திய சுயாட்சியை நேரடியாக பாதிக்கும் விதமாக இருப்பதாகவும், இது மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.

ட்ரம்ப் இதுகுறித்து, “எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் பிராந்திய எல்லை மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். சில பகுதிகள் திரும்ப பெறப்படலாம், சில பகுதிகள் மாற்றப்படலாம். இது இரு தரப்புக்கும் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும். என்னைப் பொறுத்தவரை புதின் அமைதியை விரும்புகிறார் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும், “புதினை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். அலாஸ்காவில் 15-ஆம் தேதி நடைபெறும் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானது” என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு ஜெனீவாவில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேசியது நினைவுறுத்தத்தக்கது. அதன் பின், இருவருக்குமிடையே நேரடி சந்திப்பு ஏற்படாத நிலையில், இப்போது ட்ரம்ப் – புதின் சந்திப்பு உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த அலாஸ்கா பேச்சுவார்த்தை, போரை நிறுத்தும் வரலாற்றுச் சந்திப்பாக மாறுமா அல்லது மேலும் அரசியல் பதற்றங்களை உருவாக்குமா என்பது, 15-ஆம் தேதிக்குப் பின் வெளிப்படும்.