கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “உயர்நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டால் வேறு வழியின்றி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பெண் ஆட்சியர் அளித்த புகார்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகப் புகார் எழுந்தது. மேலும், ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று தொந்தரவு அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தப் புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நவம்பர் 27ஆம் தேதி அருள் விக்னேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
இந்தக் கைது தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகளை மறைத்து அவரைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் புகாரை மறுத்துப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்கள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை அருள் விக்னேஷுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், புகார் அளித்த பெண் அதிகாரியை மனதளவில் பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இழிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமரச அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை கோரிக்கை
உயர்நீதிமன்றம் மற்றும் மகளிர் ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகே தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 119 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததுடன், புகாரை சமரசமாக முடித்துக்கொள்ள அழுத்தம் கொடுத்தவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் சட்டப்படி நியாயமான விசாரணை நடைபெற்று, விசாரணையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



