மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில், நவம்பர் 28ஆம் தேதி மாலை தீபம் ஏற்றப்பட்டது.
தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோயில் அர்ச்சகர்கள் முறைப்படி பூஜைகள் செய்து தீபாராதனை நடத்தினர். தொடர்ந்து, நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மாலை 5 மணியளவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நிகழ்வின்போது பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
'தீபம் ஏற்றியது மிகுந்த மகிழ்ச்சி'
தீபம் ஏற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், தங்களது கைகளால் தீபம் ஏற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எந்தவிதமான அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தீபம் ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அனைத்து மதத்தினரும் சகோதரர்களைப் போன்றவர்கள் என்றும், இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்தார். இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என நீதிபதி பார்த்திபன் கருத்து
மற்றொரு ஓய்வுபெற்ற நீதிபதியான வி. பார்த்திபனும், தனது கைகளால் தீபம் ஏற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரிவித்தார். இறைவன் தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
தீபம் ஏற்றப்பட்டபோது எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழாமல் நிகழ்ச்சி அமைதியாக நிறைவடைந்தது குறித்தும் நீதிபதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
விரைவில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் தொடர்பான இணக்க அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.



