தமிழ்நாடு

பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் தொல்லை புகார்: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

top-news

கள்ளக்குறிச்சி: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை போலீசார் இன்று (நவம்பர் 27) கைது செய்துள்ளனர். 

சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அதிகாரி அளித்த புகார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ஜெ.இ. பத்மஜா, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நவம்பர் 23ஆம் தேதி புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, புகாரின் தன்மை மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

சிறப்பு விசாரணை அதிகாரி நியமனம்
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, விசாரணையை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேலும், காவல்துறை ஐஜி என். காமினி விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புகார் அளித்த பெண் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விசாரணை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கில் புகார் அளித்த பெண் அதிகாரி நீதித்துறை நடுவர் முன்னிலையில் ரகசிய வாக்குமூலமும் அளித்திருந்தார். 

வீட்டிற்கே சென்று கைது செய்த போலீசார்
இந்நிலையில், இன்று மாலை சிறப்பு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கள்ளக்குறிக்கிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் வீட்டிற்குச் சென்றனர்.

அங்கு அவரிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, அருள் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது அவரது வீட்டின் முன்பாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷ் அடுத்தகட்ட விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். 

தொடர்ந்து நடைபெறும் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்படி விசாரணை மேற்கொள்ள உள் புகார்கள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனம் திரும்பியுள்ளது. 

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது பெண் உயர் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.