தமிழ்நாடு

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகை எதிரொலி... இன்றும் நாளையும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

top-news

சென்னை: இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தருவதை முன்னிட்டு, சென்னையின் முக்கிய சாலைகளில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நவம்பர் 21-ம் தேதி சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதையடுத்து, நவம்பர் 22-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீனம்பாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், ஹாட் ஏர் பலூன்கள், பாராகிளைடர்கள் உள்ளிட்டவற்றைப் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடியரசு துணைத் தலைவரின் பயணத்தின்போது குறிப்பிட்ட சாலைகளில் 'பூஜ்ஜிய போக்குவரத்து' (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

நவம்பர் 21-ம் தேதி போக்குவரத்து மாற்றம்
இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தாம்பரம்: தாம்பரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு குன்றத்தூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

- பல்லாவரம்: பன்னாட்டு விமான நிலைய சந்திப்பு (ஹோட்டல் ஏர்வே) பகுதியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு தாம்பரம் நோக்கிச் செல்லலாம்.
- போரூர்: கத்திப்பாரா சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வடபழனி வழியாகச் செல்ல வேண்டும்.
- அசோக் பில்லர்: சிபெட் (CIPET) சந்திப்பில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு கிண்டி தொழிற்பேட்டை நோக்கிச் செல்லலாம்.
- அண்ணா சாலை: எம்.சி. ராஜா யு-டர்ன் பகுதியில் வாகனங்கள் திருப்பிவிடப்படும்.
- அடையாறு: எல்.பி. சாலை பகுதியில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்படும்.
- ஓ.எம்.ஆர்.: எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பகுதியில் வாகனங்கள் திருப்பிவிடப்படும்.
- இ.சி.ஆர்.: அக்கரை சந்திப்பில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படும்.
நவம்பர் 22-ம் தேதி போக்குவரத்து மாற்றம்
நாளை காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அடையாறு மற்றும் பாரிஸ் கார்னர் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் செல்லும் வாகனங்கள்:

அடையாறிலிருந்து பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கிரீன்வேஸ் சந்திப்பில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு, சேமியர்ஸ் சாலை, டி.டி.கே. சாலை, மியூசிக் அகாடமி சந்திப்பு, ஆர்.கே. சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகத் தங்களது இலக்கை அடையலாம்.

பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு செல்லும் வாகனங்கள்:

பாரிஸ் கார்னரிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பிவிடப்படும். அங்கிருந்து வாலாஜா சாலை மற்றும் அண்ணா சாலை வழியாகச் செல்லலாம்.
பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்!
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும், போக்குவரத்து காவல்துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக தாம்பரம், கிண்டி, அடையாறு, ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர். மற்றும் பாரிஸ் கார்னர் வழியாகப் பயணிப்பவர்கள் மாற்றுப் பாதைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.