சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
70 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நவம்பர் 19-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 75.
வி.எஸ்.பாபுவின் மறைவு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் வெளியிட்ட இரங்கல்!
வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும், மக்கள் பணிக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் விஜய் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றவர்!
வி.எஸ்.பாபு தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவர். கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுகவில் அரசியல் பயணத்தைத் தொடர்ந்த அவர், பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்ற அவர், உடல்நலக்குறைவு காரணமாக தற்போது உயிரிழந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் சோகத்தில் மக்கள்!
தொகுதி மக்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த வி.எஸ்.பாபுவின் மறைவு கொளத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சி நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒருபுறம் கட்சியின் முக்கிய நிர்வாகியின் மறைவால் தவெக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மறுபுறம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



