கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அத்தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டை தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தன்னை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தமிழக அரசு, பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதாக அவர் விமர்சித்தார்.
மேலும், குற்றச்சாட்டு எழுந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் கள்ளக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடைபெற்றாலும் பரவாயில்லை என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
ஆட்சியர் மாற்றப்பட்டால் பிரளயம் வெடிக்கும்!
இந்த விவகாரத்தில் மேலும் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பெண் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானால் மிகப்பெரிய பிரளயம் வெடிக்கும் என தமிழக முதலமைச்சருக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தற்போது தமிழிசையின் எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மாவட்ட ஆட்சியர் தொடர்பான குற்றச்சாட்டில் அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது? ஆட்சியர் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.



