தமிழ்நாடு

தமிழகத்தில் மின் தேவையைச் சமாளிக்க 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்! 5 ஆண்டுகளுக்கு புதிய டெண்டர் வெளியீடு!

top-news

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் வகையில், 3,000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு நடுத்தர கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு நவம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


5 ஆண்டுகளுக்கு மின்சாரம் கொள்முதல்!

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் மின்சாரத் தேவை, வீடுகளின் பயன்பாடு மற்றும் கோடை காலங்களில் அதிகரிக்கும் மின் நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சாரத்தைப் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வாங்குவதற்கான புதிய டெண்டரை TNPDCL வெளியிட்டுள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் Finance, Own and Operate (FOO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்தக் கொள்முதல் நடைபெற உள்ளது.

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம்!

இந்தத் திட்டத்தின் கீழ், 3,000 மெகாவாட் மின்சாரத்தையும் தொடர்ந்து 24 மணி நேரமும் (Round The Clock - RTC) பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் மின்சாரத் தேவையை நீண்டகால அடிப்படையில் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய சூழலைக் குறைத்து, நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்த டெண்டரில் தகுதியுள்ள மின் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கலாம். டெண்டர் தொடர்பான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 16, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய குறுகிய கால மின்சாரக் கொள்முதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஐந்து ஆண்டுகளுக்கான நடுத்தர கால ஒப்பந்தத்தின் மூலம் கூடுதல் மின்சாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எதிர்கால மின்சாரத் தேவையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய டெண்டர், மின்சாரக் கொள்முதல் மற்றும் விநியோகத் திட்டத்தில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.