தமிழ்நாடு

5 ஆண்டுகளுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி கட்டாயம்! இல்லையெனில் பணியிலிருந்து விடுவிப்பு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

top-news

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் குறிப்பிட்ட பிரிவு ஊழியர்கள், பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டாயம் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பள்ளிக்கல்வித்துறை ஊழியர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.


யாருக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்தும்?
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவும், கீழ்நிலைப் பதவியிலிருந்து பணி மாறுதல் மூலமாகவும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஈர்க்கப்பட்டும் பல்வேறு பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான தகுதிகாண் பருவம் தொடர்பாக இந்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

5 ஆண்டுகள் மட்டுமே அவகாசம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு 31(4)-ன்படி, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களுக்கான துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக, அவர்களின் தகுதிகாண் பருவத்தை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
இந்த ஐந்து ஆண்டு கால அவகாசத்திற்குள் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு மேல் தகுதிகாண் பருவத்தை நீட்டிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிப்பு!
ஐந்து ஆண்டுகள் கடந்தும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பணியாளர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் அவர்களைத் தொடர்ந்து பணியில் அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட விதிகளின்படி ஐந்து ஆண்டு காலக்கெடுவுக்குள் துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த நடைமுறைகள் குறித்து உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவு, துறைத் தேர்வில் இதுவரை தேர்ச்சி பெறாத ஊழியர்களிடையே முக்கியத்துவம் பெற்றுள்ளது.