தமிழ்நாடு

"முதல்வர் விஜய்யை முருகனுடன் ஒப்பிடவில்லை; சாட்சியாகத்தான் குறிப்பிட்டேன்!” – புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

top-news

சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் தமிழக முதல்வர் விஜய்யையும், முருகப்பெருமானையும் தொடர்புபடுத்திப் பாடியதாக எழுந்த சர்ச்சைக்கு பாடகர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிடவில்லை என்றும், அவரை ஒரு சாட்சியாக மட்டுமே குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி பாடல்களைப் பாடினார்.

அப்போது அவர், தமிழக முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டு, "நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு" என்ற பொருளில் பாடிய வரிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.

முதல்வர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் பாடியதாகக் கூறி பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விவகாரம் அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களிலும் பேசுபொருளானது.

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்!
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் புஷ்பவனம் குப்புசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் பாடிய பாடலின் வரிகளைத் தவறாகப் புரிந்துகொண்டு பலரும் விமர்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. 'நம் தமிழக முதல்வர் போல்' என்ற இடத்தில் கமா இருக்கிறது. தமிழக முதல்வர் வேண்டிக்கொண்டதைப் போல நாமும் வேலெடுத்து பகை முடித்த முருகப்பெருமானிடம் வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றுதான் பாடினேன்" என விளக்கமளித்துள்ளார்.

"முதல்வரை சாட்சியாகத்தான் குறிப்பிட்டேன்!"

தொடர்ந்து பேசிய அவர், வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவே முதல்வர் விஜய்யைக் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"முதல்வர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டுப் பாடியதாகக் கூறுகிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது? அவரைச் சாட்சியாகத்தான் குறிப்பிட்டேன். முருகப்பெருமானின் பேரருளுக்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாரும் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், முருகப்பெருமானுக்காக ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளதாகவும், தமிழறிந்த தான் இத்தகைய தவறான பொருளில் பாடியிருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து விமர்சிக்க வேண்டாம் என வேண்டுகோள்!

தான் யாரையும் ஒப்பிட்டுப் பாடவோ, யாரையும் குறை சொல்லவோ இல்லை என்றும், முருகப்பெருமானின் பெருமையைப் பாடியதே தனது நோக்கம் என்றும் புஷ்பவனம் குப்புசாமி தெரிவித்துள்ளார்.
எனவே, பாடலின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பாடப்பட்ட பாடல் தொடர்பாக எழுந்த இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகத் தொடர்ந்து வருகிறது.