தமிழ்நாடு

நாளை நடக்கவிருந்த தவெக கல்வி விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு!

top-news

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் முதற்கட்ட பரிசளிப்பு விழா கடந்த வாரம் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், இதற்கான 2-வது கட்ட பரிசளிப்பு விழா நாளை (நவம்பர் 18) சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் நேரில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி விழாவில் பங்கேற்கும் மாணவர்களின் விவரப் பட்டியல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ஒத்திவைப்புக்கான காரணம்: இந்தநிலையில், நாளை நீலாங்கரையில் நடைபெறவிருந்த தவெக கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் முக்கிய நிர்வாகியான ஆனந்த் டெல்லியில் இருப்பதால், அதன் காரணமாகவே இந்த ஒத்திவைப்பு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய தேதி விரைவில் வெளியீடு: நிகழ்ச்சிக்கான புதிய தேதி குறித்த விவரங்கள் மற்றும் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.