தமிழ்நாடு

சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு! கிலோ ரூ.200-ஐத் தாண்டியது!

top-news

சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை வரத்து குறைவால் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


சின்ன வெங்காயம் விலை உயர்வு
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (நவம்பர் 16) அதன் விலை மேலும் உயர்ந்து, மொத்த விற்பனையில் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.200 ஆகவும், சில சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.250 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. 

வரத்து குறைந்ததே முக்கியக் காரணம்
திருச்சி, பெரம்பலூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக தினமும் 8 முதல் 10 லாரிகளில் சுமார் 100 டன் சின்ன வெங்காயம் வருவது வழக்கம். ஆனால், தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது இரண்டு லாரிகளில் சுமார் 20 டன் மட்டுமே சந்தைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தேவைக்கும் கிடைக்கும் அளவுக்கும் இடையே இடைவெளி அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் சில உணவகங்களும் அதன் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்போது விலை குறையும்?
தற்போது பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தின் அறுவடை தை மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அறுவடை சந்தைக்கு வந்து வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதுவரை சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. 

சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயத்தின் விலை இரட்டைச் சதத்தைத் தாண்டியுள்ளதால், வரும் நாட்களில் சந்தை நிலவரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.