தமிழ்நாடு

கோவை பெரியார் அறிவுலகத்தில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! புத்தகக் கொள்முதல் முறைகேடு புகாரில் தீவிர விசாரணை

top-news

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (நவம்பர் 16) இரண்டாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர். இதே விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 7 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.300 கோடியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம்!
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில், மத்திய பேருந்து நிலையம் எதிரே சுமார் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களைக் கொண்ட இந்த வளாகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நூலகங்கள், அறிவியல் சார்ந்த கட்டமைப்புகள் மற்றும் கூட்டரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் இந்த மையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

புத்தகக் கொள்முதலில் முறைகேடு புகார்!
பெரியார் அறிவுலக நூலகத்திற்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களின் பெயர்களில் போலியான புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தகுதியற்ற மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.

ஏற்கெனவே ஒருமுறை நடைபெற்ற சோதனை!
இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முதற்கட்ட சோதனை நடத்தினர்.

அப்போது நூலகத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள நிர்வாகப் பிரிவில் புத்தகக் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள், ரசீதுகள், விலைப்பட்டியல்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், சர்ச்சைக்குரிய பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்கள் தொடர்பான ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. இதற்கிடையே, சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலக அலமாரிகளில் இருந்து அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இன்று மீண்டும் 2-வது முறையாக சோதனை!
இந்நிலையில், இன்று (நவம்பர் 16) பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டிஎஸ்பி இம்மானுவேல் ஞானசேகர் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நூலகத்தின் நான்காவது தளத்தில் செயல்பட்டு வரும் தமிழ் நூல்கள் பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்கள், அவற்றின் பதிப்பக விவரங்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. 

தமிழகம் முழுவதும் 7 இடங்களில் அதிரடி சோதனை!
பெரியார் அறிவுலகம் தொடர்பான புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார் விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனின் வீடு, திருவாரூரில் உள்ள அவரது அலுவலகம், கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நூலகங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை!
புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட நடைமுறை, அவற்றின் உண்மையான சந்தை விலை, பதிப்பகங்களுக்குச் செலுத்தப்பட்ட தொகை, கொள்முதல் குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தச் சோதனைகளில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் கோவை மட்டுமின்றி தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.