தமிழ்நாடு

மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அவசரக் கடிதம்

top-news

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


கர்நாடக முதல்வரின் பேச்சால் சர்ச்சை

கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், நவம்பர் 13ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மேகேதாட்டு அணைத் திட்டம் குறித்துப் பேசியுள்ளார். மேகேதாட்டு அணையைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்து தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழக அரசு மௌனம் காக்கக் கூடாது

காவிரி நீர் என்பது வெறும் நீர்ப்பங்கீடு சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்றும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், காவிரி உரிமை தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் செயல்படுவதைப் போல, தமிழகக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமரைச் சந்திக்கவும் கோரிக்கை

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துடன் ஏற்கெனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்தையும் பிரதமரிடம் நேரில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


காவிரி உரிமையைப் பாதுகாக்கக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.