தமிழ்நாடு

குழந்தைகள் தின வாழ்த்து அட்டையுடன் மாணவர்களுக்கு கேக் வழங்கிய முதல்வர் விஜய்!

top-news

நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்துள்ளது.

அதன்படி, மாணவர்களுக்கு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.


கொளத்தூரில் மாணவர்களுக்கு கேக் வழங்கிய விஜய்!

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர், மடுமா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

அப்போது பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கிய அவர், குழந்தைகள் தின வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.


வாழ்த்து அட்டையில் இடம்பெற்ற 'All is well... Confident-ஆ இருங்க!'

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கேக்குடன் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்ற வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டன.

அந்த வாழ்த்து அட்டையின் முன்பக்கத்தில், 'All is well... Confident-ஆ இருங்க... பிரியமுடன் விஜய்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், அட்டையின் பின்புறத்தில் மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் கால அட்டவணையும் அச்சிடப்பட்டுள்ளது.

விஜய்யின் திரைப்பட வசனங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த வாசகம் தற்போது கவனத்தைப் பெற்றுள்ளது.


61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 61,84,566 மாணவர்களுக்கு கேக் வழங்குவதற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, நான்கு நிறுவனங்களிடமிருந்து கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.


ஒவ்வொரு மாணவருக்கும் மொத்தம் 45 கிராம் எடையிலான கேக் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில மாவட்டங்களில் தலா இரண்டு பாக்கெட்டுகளாகவும் விநியோகிக்கப்படுகிறது.


கேக்குகளின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை!

மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குகளின் தரத்தை உறுதி செய்வதற்காக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாதிரிகளைப் பரிசோதனை செய்துள்ளனர்.

மேலும், கேக்குகள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்படுவதையும், பள்ளிகளுக்கு முறையாக விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த ஏற்பாடுகள் மூலம் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளைப் பெற்றுள்ளனர்.