தமிழ்நாடு

கடலில் மூழ்குவோரை மீட்க ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தக் கூடாதா? தமிழக அரசுக்கும் மத்திய அமைப்புகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

top-news

கடலில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக்கொள்பவர்களையும், நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களையும் மீட்க ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடலில் சிக்குபவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகளின் மீட்புக் குழுக்களுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இருக்கிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

17 வயது சிறுவன் மாயமான வழக்கில் விசாரணை
சென்னை மாதவரத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் தனது 17 வயது மகன் ஜி. சந்தோஷை கண்டுபிடித்துத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஜூலை 5-ம் தேதி மாலை, சந்தோஷ் தனது நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் கடலில் இறங்கி குளித்தபோது, ராட்சத அலைகளில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரண்டு நண்பர்கள் மீட்கப்பட்ட நிலையில், சந்தோஷ் மட்டும் மாயமானார். அவரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அவரது நிலை தெரியவில்லை.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.டி. ஜகதீஷ் சந்திரா, பி. கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 

மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியாதா?
இந்த வழக்கின் விசாரணையின்போது, கடலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளிலும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும், தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களிலும் கடலில் மூழ்குபவர்களை விரைந்து மீட்க ஹெலிகாப்டர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கடலில் தத்தளிப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மாநில மற்றும் மத்திய அரசின் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.