சென்னை: கோவையில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பொது நூலகத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஜெயந்தி மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஷஜீவனா ஐஏஎஸ் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் இந்த நிர்வாக நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் அறிவுலகம் நூல் கொள்முதலில் சர்ச்சை
கோவை காந்திபுரத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தை கடந்த அக்டோபர் 16-ம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தின் தமிழ் நூல்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த புத்தகங்கள் தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரை மூலம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, சில பதிப்பகங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களில் வரலாற்றுப் பிழைகள், தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் உள்ளடக்கங்கள் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், புத்தகங்களின் தரம் மற்றும் அவற்றுக்கான விலை நிர்ணயம் குறித்தும் சந்தேகங்களை எழுப்பினார். இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
சர்ச்சைக்குரிய புத்தகங்கள் அகற்றம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகம் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டன.
மேலும், நூல் கொள்முதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. நூல்கள் வாங்குவதற்கான ஒப்புதல், கொள்முதல் நடைமுறை, விலை நிர்ணயம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பெரியார் அறிவுலகம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற அரசு நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்ட விதம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் அமைச்சர் புகார்
இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களின் புத்தகக் கொள்முதல் நடைமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



