தமிழ்நாடு

தமிழக கிராமப்புற மக்களுக்கு வீடு கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு! ‘வெற்றி வீடு’ திட்டத்தில் 70,000 பயனாளிகளுக்கு தலா ரூ.5 லட்சம்

top-news

வெற்றி தமிழகம்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களுக்கு மொத்தம் 5 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதன் முதல்கட்டமாக, 2026-27-ஆம் நிதியாண்டில் 70,000 வீடுகள் கட்டுவதற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளில் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


ஒரு வீட்டிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான ஒவ்வொரு பயனாளிக்கும் வீடு கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். வீடுகள் குறைந்தபட்சம் 360 சதுர அடி முதல் அதிகபட்சம் 500 சதுர அடி வரை கட்டப்பட வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை இடம்பெற வேண்டும். அனைத்து வீடுகளும் கான்கிரீட் மேற்கூரையுடன் அமைக்கப்பட வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு கட்டுவதற்கான நிதி ஒரே தவணையாக வழங்கப்படாமல், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நான்கு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அடித்தளம் அமைத்தல், ஜன்னல் மட்டம் வரை கட்டுதல், மேற்கூரை அமைத்தல் மற்றும் கட்டுமானத்தை நிறைவு செய்தல் எனப் பணிகளின் அடிப்படையில் நிதி வழங்கப்படும்.


யாருக்கெல்லாம் முன்னுரிமை?

இந்தத் திட்டத்தில் உண்மையிலேயே வீட்டு வசதி தேவைப்படும் ஏழை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

  • குடிசை வீடுகளில் வசிப்பவர்கள்.

  • மண் சுவர்களைக் கொண்ட வீடுகளில் வசிப்பவர்கள்.

  • உறுதியற்ற கூரையுடன் கூடிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள்.

  • ஏற்கெனவே அரசின் வீடற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகுதியானவர்கள்.

மேலும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் பட்டா அல்லது நில உரிமைக்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் மற்றும் ஏற்கெனவே அரசு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் இத்திட்டத்தில் சேர முடியாது.


பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

தகுதியான பயனாளிகளை அடையாளம் காண ஊரகப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மொபைல் செயலி வாயிலாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டப் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

மேலும், இறுதியாகத் தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் பட்டியல் ஊராட்சி அலுவலகங்களிலும் அரசின் இணையதளத்திலும் வெளியிடப்படும். முதல்கட்டமாகக் கட்டப்படும் 70,000 வீடுகளுக்கான பயனாளிகளை ஏற்கெனவே ஊரக வளர்ச்சித் துறையிடம் உள்ள வீடற்றோர் பட்டியலிலிருந்தும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் நிதி தேவைப்பட்டால் கடன் வசதி

வீடு கட்டுவதற்கான ரூ.5 லட்சம் நிதியுதவிக்கு மேலாக கூடுதல் பணம் தேவைப்படும் பயனாளிகளுக்கு கடன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் ரூ.50,000 வரை 6 சதவீத வட்டியில் சமூக முதலீட்டு நிதிக் கடன் பெறலாம். அதேபோல், கூட்டுறவு அல்லது வணிக வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை வீட்டுக் கடன் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்தும் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம், அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வழங்கப்படும். மேலும், தனிநபர் கழிப்பறை வசதி இல்லாத தகுதியான பயனாளிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் ஊரகம் திட்டத்தின் கீழ் ரூ.12,000 செலவில் கழிப்பறை அமைத்துத் தரப்படும்.


ரூ.3,500 கோடி நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகிறது?

இத்திட்டத்திற்கான மொத்த நிதியான ரூ.3,500 கோடியில், மாநில அரசின் நிதியாக ரூ.2,600 கோடியும், கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.900 கோடியும் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையில் 5 சதவீதம் மாவட்ட ஆட்சியரின் விருப்ப ஒதுக்கீடாக இருக்கும். இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கணக்கெடுப்பில் விடுபட்ட தகுதியான பயனாளிகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும்.


கிராமப்புறங்களில் வீட்டு வசதியின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் திட்டம், 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.