தமிழ்நாடு அரசு கல்வித் துறையின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற மாபெரும் விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
‘நான் முதல்வன்’, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், விளையாட்டுத் துறை சாதனையாளர்கள், சிறப்புக் குழந்தை சாதனையாளர்கள் என ஏழு திட்டங்களை உள்ளடக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், அரசின் கல்வி சார்ந்த திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தங்களது நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இதையும் படிக்க: “தொடர்ந்து படியுங்கள்... துணையாக இந்த மு.க. ஸ்டாலின் இருக்கிறேன்” உணர்ச்சிவசப்பட்ட முதலமைச்சர்!
முதல் ஊதியத்தை அப்பாவுக்கு வழங்கி கண்ணீர் மல்கிய இளம் பெண்:
அரசு திட்டத்தின் மூலம் பயனடைந்த இளம் பெண் ஒருவர் மேடையில் பேசுகையில், குடும்ப வறுமையிலும் தன்னை படிக்க வைத்து, தனது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்த தனது தந்தையைப் பற்றிப் பேசினார்.
"அனைத்து விஷயங்களிலும் என்னுடன் துணை நின்றவர் என் அப்பா. இந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் என் அப்பா தான். நான் எது படிக்க வேண்டும் என்று கூறினாலும், அதற்கு உடனே சரி என்பார். முடியாது என்றே கூறாமல், நான் பாத்துக்கொள்கிறேன் என்பார்" என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
அவர் தொடர்ந்து, "இதுவரை அவரிடம் சொல்லாத ஒருவிஷயத்தை இந்த மேடையில் அவரிடம் சொல்கிறேன். ஒரு மகளாகவும், மகனாகவும் இருந்து உங்களை நான் பார்த்துகொள்வேன் அப்பா. நீங்க என்னை அம்மா என்றுதான் கூப்பிடுவீர்கள். இனி நான் உங்களை, உங்க அம்மா போல் நல்லா பார்த்துகொள்வேன். அப்பா நீங்க எதுக்கும் கவலைப்படக்கூடாது. இது என் முதல் மாத ஊதியம் உங்களிடம் கொடுக்கிறேன்" எனக் கூறி, தான் ஈட்டிய முதல் ஊதியத்தை தனது தந்தையிடம் வழங்கினார்.
கண்கலங்கிய அமைச்சர் கீதா ஜீவன், இயக்குநர் பிரேம்குமார்:
இளம் பெண்ணின் உணர்ச்சி மிகுந்த இந்த உரை, நிகழ்ச்சியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேடையில் இருந்த அந்தப் பெண், அவரது தந்தை, உடன் இருந்த பெண்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அமைச்சர் கீதா ஜீவன், இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட அனைவரையும் இந்தக் கண்ணீர்க் காட்சியைப் பார்த்துக் கண்கலங்க வைத்தது. தந்தையின் பாசத்தையும், மகளின் நன்றியுணர்வையும் வெளிப்படுத்திய இந்த நிகழ்வு, அங்கிருந்த அனைவரின் மனதையும் தொட்டது.


