ராமநாதபுரம், அக்டோபர் 22: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சராக முதல்முறை வருகை!
அக்டோபர் 30ஆம் தேதி மதுரை வரும் விஜய், கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் தேவர் குருபூஜை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு வளையத்தில் பசும்பொன்!
விஜய்யின் வருகையை முன்னிட்டு மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், முக்கிய வழித்தடங்களில் கண்காணிப்பு, பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
பொதுமக்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்!
விழாவிற்கு வாடகை மற்றும் திறந்தவெளி வாகனங்களில் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அரசியல் தலைவர்களின் வாகன அணிவகுப்பில் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



